இலங்கைக்கு 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கடத்த முயன்றது தொடர்பாக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு, போதைப்பொருள் கடத்தப்படுவதாக, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரின் பையை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 970 கிராம் கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மத் என்பது தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின்பேரில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் மற்றும் இப்ராஹிம் ஆகிய 2 நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், மெத்தபெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இப்ராஹிம், ராமநாதபுரம் மாவட்டம் திமுக சிறுபான்மை அணி துணைத்தலைவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.