கேரளாவை தொடர்ந்து, தமிழகத்தில் நீலகிரியிலும், கர்நாடகாவில் சக்லேஷ்பூர் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை கூடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து மண்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக கூடலூர் சாலையிலுள்ள காட்சி முனை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலை துறையினர் சாலையில் விழுந்த மண்ணை ஜேசிபி உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, உதகையிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உதகை கூடலூர் சாலையில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதால் 24 மணிநேரமும் நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்து வருகின்றனர்.