சிவகங்கையில் நடந்து வரும் கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே கீழடியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த மணிகள், கட்டிட அமைப்புகள், தங்கத்திலான பொருட்கள் என ஏராளமானவை கண்டெடுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து 10-ம் கட்ட அகழாய்வை, தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த அகழாய்வில் ஏற்கனவே பாசி மணிகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உலோகத்தால் ஆன பொருட்கள் கிடைத்த நிலையில் தற்போது சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டறியப்பட்டுள்ளது.
174 செ.மீ நீளம் கொண்டுள்ள இந்த குழாய் வடிவ வடிகாலில் ஆறு உறைகள் மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்டு உள்ளன. இது கீழடியில் வாழ்ந்த பழந்தமிழர்களின் சிறந்த நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.