மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருதால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணை 43ஆவது ஆண்டாக முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் முழுவதும், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டிய நிலையில், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் ஆன நிலையில், 43வது ஆண்டாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.