ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பதினாறு சக்கர சப்பரம் ரத வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆண்டாள் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியில் 16 சக்கர சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்கள் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் உள்ள உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்ற நிலையில், பட்டாடை உடுத்தி அணிகலன்கள் அணிந்து மேள தாளங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் தூய்மை பணிகள் நடைபெறுவதால் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 22ஆம் தேதி கால்நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை பூக்குழி இறங்கும் நிகழ்வு வரும் 4,5ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கோயிலில் தூய்மைப் பணிகள் நடைபெறுவதால் அடுத்த 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.