இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் கால்பந்து மைதானம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இஸ்ரேல், ஹிஸ்புல்லா போராக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அரபு மொழி பேசும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் ‘ட்ரூஸ்’ சமூகமாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும், இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றுகள், சிரியா மற்றும் லெபனானில் வசித்து வருகிறார்கள்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள நான்கு கிராமங்களில் மஜ்தல் ஷம்ஸ் ஒன்றாகும். 20,000 க்கும் மேற்பட்ட ‘ட்ரூஸ்’ சமூகத்தினர் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்களுடன் மஜ்தல் ஷம்ஸ்ஸில் உள்ளனர்.
இவர்கள் யாரும் இஸ்ரேலிய குடியுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், இஸ்ரேலின் மிகவும் விசுவாசமான குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் ,ட்ரூஸ் சமூகத்தின் தலைவர்களில் பெரும்பாலானோர் சிரியாவுக்குத் தான் விசுவாசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
1967ம் ஆண்டு ஆறு நாட்கள் நடந்த போரில் கோலன் குன்றுகள் பகுதியை இஸ்ரேல் இராணுவம் கைப் பற்றியது. பின்னர், 1981ம் ஆண்டில் ஐநா பாதுகாப்பு சபையின் கண்டனத்தை மீறிய இஸ்ரேல், கோலன் குன்றுகளை தன் வசமே வைத்துக் கொண்டது. .
இப்பகுதியை மீட்பதற்காக சிரியா எடுத்த அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் முறியடித்தது
கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை மீண்டும் ஒரு மோசமான தாக்குதல் நடந்திருக்கிறது.
இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றுகள் பகுதியில் நடந்துள்ள இந்த தாக்குதலில் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
மஜ்தல் ஷம்ஸ் கிராமத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து ஈரானில் தயாரிக்கப்பட்ட ஃபலாக்-1 ஏவுகணை கோலன் குன்றுகள் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் விழுந்ததற்கான ஆதாரங்கள் சம்பவ இடத்தில் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறி இருக்கிறது.
மேலும், தெற்கு லெபனானில் உள்ள ஷெபாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எல்லை மீறிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டி விட்டனர், அதற்கு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாக இருக்கும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியிருக்கிறார்.
ஈரானால் உரமிட்டு வளர்க்கப்படும் லெபனானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லா, இந்த தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இல்லை என்று மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் மீது தினசரி தாங்கள் நடத்திய தாக்குதல்கள் பட்டியலையும் தந்துள்ளது.
இந்நிலையில், கோலன் குன்றுகள் மீதான ஏவுகணை தாக்குதலின் பின்னணியில் ஹிஸ்புல்லா இருந்ததற்கான எல்லா அறிகுறிகளும் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த தாக்குதலுக்காக
ஹிஸ்புல்லா இதுவரை கொடுக்காத கடும் விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்திருக்கிறார்.
மஜ்தல் ஷம்ஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி இஸ்ரேல் அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கெனவே,அரசின் இராணுவ நடவடிக்கை பற்றிய எந்தவொரு முடிவையும் இஸ்ரேல் அமைச்சரவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று இஸ்ரேல் அரசு சட்டம் இயற்றியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
காசாவில் மோதல் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நடந்த தாக்குதல்கள் முழுப் போருக்கான சூழலை உருவாக்கி இருக்கிறது.
ஹமாஸை விட பன்மடங்கு பெரியதான ஹிஸ்புல்லா அமைப்பினரும் இனி தீவிரத் தாக்குதலில் ஈடுபடுவார்கள் என்றும், பதிலுக்கு இஸ்ரேல் இராணுவமும் தீவிரமாக போரிடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி நடந்தால் , பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப் படுவார்கள் என்றும் பெரும் சேதம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்த இராணுவ நடவடிக்கையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் மற்றும் போரின் தீப்பிழம்புகளுக்கு இரையாகும் என்று கூறி இருக்கிறார்.
நீண்ட காலமாகவே, நிழல் யுத்தமாக இருந்து வந்த ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் கடந்த ஏப்ரலில் வெளிப்படையாக வெடித்தது.
தற்போது ஈரானும் நேரடியாக இஸ்ரேலுக்கு எதிரான போரில் இறங்கக் கூடும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
காசாவில் ஏறத்தாழ 10 மாத கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பரபரப்பான பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இந்த கோலன் குன்றுகள் மீதான தாக்குதல் , போரைத் தொடங்கி வைத்து விட்டது என்று உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.