கடவுளின் தேசம் என்று அழைக்கப்பட்டாலும், கேரளா அடிக்கடி இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகிவதால் கண்ணீர் தேசமாகி வருகிறது. உலகையே உலுக்கியுள்ள வயநாடு நிலச்சரிவால் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டாலும், உண்மையான காரணங்கள் என்னென்ன ? இனியும் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
கேரளாவில் பிரபலமான சுற்றுலாத் தலமான வயநாடு இப்போது அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. பச்சை பசேல் என்று கண்ணையும் மனதையும் குளிர வைக்கும் பசுமையான வயநாடு, பேரழிவின் எச்சம் போன்று காட்சியளிக்கிறது. செழிப்பான ஆறுகள் ஓடும் பள்ளத்தாக்குகள் நிறைந்த அழகான வயநாடு, இப்போது அலங்கோலமாக கூறு போடப்பட்டது போன்று சிதைந்து கிடக்கிறது.
கேரளாவில் 2018ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் 483 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவில் பெய்த கனமழையால் , காவல் பாறை பாறைகள் வெள்ளத்தில் மூழ்கின. முத்தப்பன் குன்னு பள்ளத்தாக்கில் சுமார் 49 வீடுகள் மண்ணில் புதைந்தன. 20 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு 49 பேர் கண்டெடுக்கப் பட்டனர். காவல் பாறை பொதுக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மொத்தமாக 58 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்தனர். பலர் காணாமல் போயினர்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.நான்கு மணி நேரத்தில் மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 300க்கும் மேற்பட்ட வீடுகள் உட்பட கடைகள் வாகனங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் காணாமல் போயின.
வயநாட்டில் முண்டைக்கை மற்றும் சூரல் மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல் மற்றும் உடல் பாகங்கள் சாலியாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. 200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் பலரின் நிலை என்னவென்றே தெரியவில்லை.
மேப்பாடியில் ஏற்பட்ட வெள்ளம் சாலியாற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டிருக்கிறது. முண்டைக்கை கிராமத்தையே தற்போது காணவில்லை. கேரளாவில் பெரும்பாலும் நிலச்சரிவுகள் புதுமலை, காவலப் பாரா மற்றும் பெட்டிமுடி ஆகிய பகுதிகளே அதிகம் பாதிக்கப் படுகின்றன. உண்மையில் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்தாலே கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டு விடுகிறது.
அதுமட்டுமில்லாமல், கேரளாவில் ஏறத்தாழ பாதி மலைகள் 20 டிகிரிக்கு மேல் சரிவுகளைக் கொண்ட மலைப்பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கனமழைக் காலங்களில், இந்த பகுதிகள் நிலச்சரிவுகளுக்கு ஆளாகின்றன.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, கேரளாவில் 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே அதிகமான நிலச்சரிவுகள் தான் ஏற்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் மட்டும் 3,782 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் உள்ள பாறைகள் சுமார் 300 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஆனால் அவற்றை உள்ளடக்கிய மெல்லிய அடுக்குகள் சுமார் 10,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப் படுகிறது. இரண்டு விதமான மண் அடுக்குகளால் ஆன வித்தியாசமான பாறைகள் கேரள நிலப்பரப்பில் உள்ளன. ஆகவே கனமழையின் போது இவை மண் அரிப்புக்கு பாதிப்படைய கூடியதாக இருக்கிறது.
கேரளாவைப் பொறுத்தவரை , முதலில் நிலச்சிதைவு ஏற்படுகிறது. அதன்பின் மண் அரிப்பு உண்டாகிறது. பிறகு நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
நிலத்தடியில் உடைந்த கற்களுக்கு அடியில் களிமண் நிறைந்த பகுதிகள் உள்ளன. கனமழையால் விழுந்த மரங்களின் வேர் வழியாக தண்ணீர் இறங்கி இந்த களிமண் அரிப்பெடுக்கிறது. இதன் விளைவாக மேலே உள்ள பாறைகள் உடைந்து சரிகின்றன.
14 ஆண்டுகளுக்கு முன் சுற்று சூழல் அறிஞர் மாதவ் காட்கில் குழு அளித்த எல்லை வரையறுப்பு பரிந்துரைகளில், மேற்குத் தொடர்ச்சி மலையின் 129,037 சதுர கிமீ பரப்பளவில் 75 சதவீத அடர்ந்த காடுகள் இருப்பதால் இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்யப் பட்டது.
இதனைத் தொடர்ந்து, கஸ்தூரிரங்கன் தலைமையிலான இரண்டாவது குழு, மேலும் ஒரு பரிந்துரையை அளித்திருந்தது.
இந்நிலையில், கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் 56,825 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் இதை நடைமுறைப்படுத்துமாறு அந்தந்த மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது.
கல் குவாரித் தொழில் ,சுரங்கத் தொழில் போன்ற தொழில் நடத்த தடையாக இருப்பதால், கேரளா , கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்க்கின்றன.
மாநில அரசுகள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பழமையான சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ஆறு மாநில அரசுகளின் பரிந்துரைகளை முழுமையான முறையில் மறு ஆய்வு செய்ய அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது.
கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளின் கவலைகள் குழுவால் விவாதிக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எல்லை வரைவு அறிவிப்பு இறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்திருக்கிறார்.
கேரளாவில் ஏற்படும் பயங்கர நிலச்சரிவுகளுக்கு மாறிவரும் வானிலை மற்றும் அதிக மழைப் பொழிவு எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
கடந்த பல ஆண்டுகளாகவே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் இருந்த பகுதிகளில் சுற்றுலா தங்கும் சொகுசு விடுதிகள், நவீன ரிசார்ட்டுகள் கட்டப்படுகின்றன. நகரமயமாக்கலுக்காக இயற்கையை அழிப்பது நிறுத்தப் படாத வரை, இத்தகைய நிலச்சரிவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்பது கசப்பான உண்மை.