“வயநாடு நிலச்சரிவில் இருந்து இதுவரை ஆயிரத்து 386 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்” எனவும், “191 பேரை காணவில்லை” என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, “வயநாட்டில் 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8 ஆயிரத்து 17 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” எனவும், “நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ. மழை பதிவு பதிவாகியுள்ளது” என்றும் தெரிவித்தார்.
மேலும், “மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தற்காலிக பாலம் அமைக்கப்பட உள்ளது” என்றார். தொடர்ந்து பேசியவர், “நிலச்சரிவு தொடர்பாக ஆகஸ்ட் முதல் தேதி அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்” எனவும், “நிலத்தின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேஜர் ஜெனரல் இந்திர பாலன் குழுவினரின் உதவி கோரப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.