சண்டிகர், அசாமில் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை தொடங்கியுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி,
சண்டிகர் மற்றும் அசாமில் உள்ள சாலைகளில் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைந்து கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து நேரிட்ட நாளிலிருந்து அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை செலவிலான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988, 164 பி பிரிவின் கீழ், மோட்டார் வாகன விபத்து நிதி மூலம் சண்டிகர் மற்றும் அசாமில் இத்திட்டத்தை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ளூர் காவல் துறை, திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், மாநில சுகாதார ஆணையம், தேசிய தகவல் மையம், பொது காப்பீட்டு குழுமம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் தேசிய சுகாதார ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொறுப்பு வகிக்கிறது என தெரிவித்தார்.