இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிடக்கோரியும் வெளியுறவு அமைச்சகத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நேற்று 359 மீன்பிடிக் கப்பல்கள் அனுமதிச் சீட்டு பெற்று, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரின் படகு, மீன்பிடிக் கப்பல் மீது மோதியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது கப்பலில் இருந்த 4 மீனவர்களில் ஒரு மீனவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாகவும், ஒரு மீனவர் காணாமல் போயுள்ளதாகவும், இரு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
சமீபகாலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். காணாமல் போன தமிழக மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிடுவதுடன்,
கைது செய்யப்பட்ட மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வெளியுறவு அமைச்சகம் தலையிடுமாறும் அண்ணமாலை கேட்டுக்கொண்டுள்ளார்.