சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூரை அடுத்த கணபதி தெருவில் உள்ள வீட்டு மனைகள் வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு அருகேயுள்ள பொதுவழியும் தனக்கு சொந்தம் எனக்கூறி, மவுலானா சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார். இதனால் பொதுமக்கள் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் சுமார் 3 கிலோ மீட்டர் அளவுக்கு சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆகவே இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
எனினும், சுவற்றை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்திவந்தனர். இதனையடுத்து தலைமை செயலர் சிவதாஸ் மீனாவின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பில் இருந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றும் பணி நடைபெற்றுவந்தது. அப்போது அங்கு அடியாட்களுடன் வந்த அசன் மவுலானா, மாநகராட்சி பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ-வின் இந்த அராஜக செயல் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.