இந்திய – இலங்கை கடற்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதியதில் மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்திருப்பதை வெறும் விபத்தாக கருத முடியாது என்றும் அதனை கொலையாக பார்க்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 23ஆம் தேதி தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியது. இதில், சிங்களக் கடற்படை படகு கவிழ்ந்ததில் சிங்கள வீரர் ஒருவர் உயிரிழந்தார் என குறிப்பிட்டுள்ள அன்புமணி, இதற்கு பழிவாங்கும் விதமாகதான் இலங்கை கடற்படையினர் இவ்வாறு விபத்து ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் பாரம்பரியாக மீன்பிடித்து வரும் இடங்களில் தொடர்ந்து மீன்பிடிக்க மீனவர்களுக்கு உரிமை உண்டு என தெரிவித்துள்ள அவர், தமிழக மீனவர்களை கொலை செய்யும் அளவுக்கு துணிந்துள்ள இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டுமென பதிவிட்டுள்ளார்.
மேலும், மீனவர் அமைப்புகளை அழைத்து பேசி இந்திய – இலங்கை கடற்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.