பாரிஸ் ஒலிம்பிக் ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில்,
50 மீட்டா் ரைபிள் இறுதிச் சுற்றில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா மூன்று வெண்கலப் பதக்கங்களை பெற்று, பதக்கப் பட்டியலில் 41-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
“ஸ்வப்னில் குசாலேவின் சிறப்பான பங்களிப்பு! பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்.
அவரது பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், அவர் சிறந்த திறன்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.