வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மகப்பேறு வார்டில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்த சின்னி என்பவர் பிரசவத்துக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் கடந்த 31-ம் தேதி மகப்பேறு வார்டுக்குள் இருந்த பெண் ஒருவர் சின்னியின் குழந்தையை தாலாட்டுவது போல நடித்து கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது குழந்தையை கட்டப்பையில் வைத்து கர்நாடக மாநிலம் சிக்பல்லபூருக்கு கடத்திச் சென்றதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து உடனடியாக சிக்பல்லபூருக்கு விரைந்த தனிப்படை போலீசார், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட லீலாவதி என்பவர் உட்பட மொத்தம் 7 பேரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
பின்னர் அங்கிருந்து குழந்தை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வேலூர் கொண்டு வரப்பட்டு பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.