ராஜிந்தர் நகர் சம்பவத்தில் உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்களின் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த 27ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழையின்போது ராஜிந்தர் நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மழைநீர் புகுந்தது. தரை தளத்தில் செயல்பட்டு வந்த நூலகத்தில் சிக்கிய 20 மாணவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மழைநீரில் மூழ்கி உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்களின் பெயரில் 4 நூலகங்கள் அமைக்கப்படும் என டெல்லி மேயர் ஷெல்லி ஒபராய் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திர நகரில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், டெல்லியில் அரசு நூலகங்களின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
தனியார் நூலங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாக கூறியுள்ள அவர், ராஜிந்தர் நகர், முகர்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 4 பொது நூலகங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நூலகங்களின் கட்டுமானப் பணிக்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் ஷெல்லி ஓபராய் கூறியுள்ளார்.