லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தி தாக்குதலில் பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிலர் பிணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியும், ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதியும் படுகொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்த ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி உத்தரவிட்டார்.
இந்த சூழலில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு அதிரடி தாக்குதல் நடத்தியது. 20க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியதில், 5 மட்டுமே இஸ்ரேலுக்குள் புகுந்ததாகவும், யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.