பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் இடம்பிடித்தது.
அதுகுறித்து விளக்கிய முதலமைச்சர் ரங்கசாமி, இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று இளநிலை படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 3 ஆண்டுக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறினார்.
பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முறையே தலா 20 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் 5 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.