ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தென்மேற்குப் பருவமழை தண்ணீர், நமது நதிகளில் கரைபுரண்டு ஓடி வரும்போது, அந்தப் புதிய நீரை வரவேற்பதற்காக, ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வருவதும், காவிரி, வைகை, தாமிரபரணி என நமது பெருமை வாய்ந்த நதிக்கரைகளில் கொண்டாடப்பட்டு வரும் ஆடிப் பெருக்கு குறித்து, அகநானூறு, பரிபாடல் உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலேயே பாடல்கள் இருப்பதும், உழவர் ஓதை, மதகு ஓதை, உடை நீர் ஓதை, தண்பதம் கொள் விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப, நடந்தாய்; வாழி, காவேரி! என ஆடிப் பெருக்கு விழாவையும், காவிரி நதியில் ஓடும் புதுப்புனலையும் போற்றி, இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்திலேயே பாடியிருப்பதும் தனிச்சிறப்பு.
எங்கும் வளம் பெருகவும், எல்லோர் உள்ளம் மகிழவும், இந்த ஆடிப்பெருக்கு தினம் அருளட்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.