சென்னை ராயப்பேட்டை பகுதியில், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒயிட்ஸ் சாலையில் அமைந்திருக்கும் 250 ஆண்டுகள் பழமையான ரத்தின விநாயகர் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலை, மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இடிக்க சிஎம்ஆர்எல் நிறுவனம் திட்டமிட்டது. இதனை எதிர்த்து இந்து அமைப்பினர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ரவி, ராகவாச்சாரி ஆகியோர், ரத்தின விநாயகர் கோயிலை நேரில் பார்வையிட்டனர். அப்போது, பக்தர்களை உள்ளே விடாமல் போலீஸார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.