ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் பொதுமக்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். அந்த வகையில், ஆடி அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் மக்கள் நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகாலை முதலே குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுதத்னர். தொடர்ந்து கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயில் வளாகம் மற்றும் வனப்பகுதியில் குடில் அமைத்து தங்கிய பக்தர்கள், சிறப்பு பொங்கல் வைத்தும், சைவப் படையல் இட்டும் வழிபாடு செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆடி அமாவாசையையொட்டி 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.