வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இது தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த நீது என்ற பெண் சூரல்மலை கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த 30ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நீது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. உடனடியாக அவர் வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சூரல்மலை பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதான் நிலச்சரிவு தொடர்பாக மீட்புக் குழுவுக்கு கிடைத்த முதல் தகவல் என கூறப்பட்ட நிலையில், சூரல்மலையில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புக் குழுவினர் அங்கு செல்வதற்கு முன் நீது மண்ணில் புதைந்துள்ளார்.
நீத்து குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மலை மீது ஏறி உயிர் தப்பிய நிலையில், மண்ணில் புதைந்து உயிரிழந்த நீதுவின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.