இந்தியா, சீனா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் நடுத்தர வருமான வலையில் விழும் அபாயத்தில் இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
2022ம் ஆண்டில் உலக வங்கி நடுத்தர வருமான நாடுகளுக்கான வரையறையை மாற்றியது. அதாவது 1,086 அமெரிக்க டாலர் முதல் 13,205 அமெரிக்க டாலர் வரை தனிநபர் மொத்த தேசிய வருமானம் உள்ள நாடுகளே நடுத்தர வருமான நாடுகளாக குறிக்கப்படுகின்றன.
நிதி ஸ்திரத்தன்மை, உலகளாவிய வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நிலையான முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த நடுத்தர வருமான நாடுகளை உலக வங்கி வரிசைபடுத்துகிறது.
நடுத்தர வருமானம் கொண்ட நாடு, உயர் வருமானம் கொண்ட பொருளாதாரமாக மாறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையை நடுத்தர வருமான வலை என்று கூறுகிறது உலக வங்கி.
நடுத்தர வருமான வலை அல்லது பொறியில் சிக்கும் நாடுகளையும் பட்டியலிட்டு வெளியிடுவதை உலக வங்கி வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் தான், இந்தியா மற்றும் சீனா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள், உயர் வருமானம் கொண்ட வளர்ந்த பொருளாதாரங்களுக்கு மாறுவதற்குத் கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றன.
இதனால் இந்த நாடுகள், நடுத்தர வருமான வலையில் விழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று உலக வங்கி அதன் முக்கிய உலக வளர்ச்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1990ம் ஆண்டு முதல் 34 நடுத்தர வருமான நாடுகள் மட்டுமே அதிக வருமானம் பெறும் நாடுகளாக முன்னேற முடிந்தது என்று கூறும் உலக வங்கி, நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் தங்கள் பொருளாதார திட்டத்தை மாற்றவில்லை என்றால், முன்னேறுவது சிரமம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
2023ம் ஆண்டில் 108 நாடுகள் நடுத்தர வருமானம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உலகவங்கி, உலக மக்கள் தொகையில் 75 சதவீத மக்கள் இந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்றும் , இந்த ஆறு பில்லியன் மக்களில், மூன்றில் இரண்டு பேர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர் என்றும் கவலையைத் தெரிவித்திருக்கிறது.
முதலீட்டை அதிகரிப்பதோடு, வெளிநாடுகளில் இருந்து பெறப் பட்ட தொழில்நுட்பங்களை உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைத்து செயற்படுமாறும், படிப்படியாக முன்னேறும் கொள்கைகளின் திட்டத்தைச் செயல்படுத்துமாறும் உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த வர்த்தகம் மற்றும் திறந்த பொருளாதாரங்களின் பாரம்பரிய வளர்ச்சி சூழல் வேகமாக சரிந்து வருவதே வளர்ந்து வரும் 108 மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உள்ள முக்கிய சவால் என்று உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை எட்டுவதற்கு சீனாவுக்கு 10 ஆண்டுகளும், இந்தோனேசியாவுக்கு 70 ஆண்டுகளும், இந்தியா 75 ஆண்டுகளும் ஆகும் என்று உலக வங்கியின் வளர்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்பது பாராட்டத்தக்க இலக்கு என்று உலக வங்கியின் அறிக்கை புகழாரம் சூட்டி இருக்கிறது.