ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உட்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்டார். அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டிய ஈரான், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள விமானப்படைத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்கப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.