ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முதல் சுற்று போட்டித் தொடங்கும் முன் ஒரு முறை, இறுதிப்போட்டிக்கு முன் மற்றொரு முறை என இரண்டு முறை உடல் எடை பரிசோதிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது வினேஷ் போகத் நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் இருந்ததாக தகவல் வெளியானது.
அதன்பின்னர் அவரது எடை ஓரளவு அதிகரித்தது. மல்யுத்த இறுதிப் போட்டியில் பங்கேற்கும் முன் அவர் 2 கிலோ வரை எடையைக் குறைக்க வேண்டியிருந்தது.
இதனால் அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர், எடையைக் குறைப்பதற்காக இரவு முழுவதும் ஸ்கிப்பிங் மற்றும் சைக்கிள் ஓட்டுவதில் வினேஷ் போகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இருப்பினும், இறுதிப்போட்டிக்கு முன் மேற்கொள்ளப்பட்ட உடல் எடை பரிசோதனையின்போது, நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி கூடுதலாக நூறு கிராமுடன் வினேஷ் போகத் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக அவரை தகுதிநீக்கம் செய்து ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்தது.
ஐக்கிய உலக மல்யுத்த விதி எண் 11-இன்படி, முதல் மற்றும் இரண்டாவது முறை நடைபெறும் உடல் எடை பரிசோதனையின்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் எடையுடன் ஒரு வீரர் இருந்தால், அவர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார் என்றும், அவருக்கு ரேங்க் ஏதும் வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல் எடை தகுதி தேர்வில் பின்னடைவை சந்தித்ததால், வினேஷ் போகத் போட்டியிலிருந்து விலகி, பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். போட்டியிலிருந்து அவர் விலகியதை தொடர்ந்து, மல்யுத்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு தங்கமும், அடுத்த இரு இடங்களைப் பெறுபவர்களுக்கு வெண்கலமும் வழங்கப்படவுள்ளது. விதிப்படி, வெள்ளி பதக்கம் வழங்கப்பட மாட்டாது என ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.