பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி. உஷா உறுதியளித்தார்.
பாரீஸில் இருந்தவாறு காணொலி வாயிலாக அவர் அளித்த பேட்டியில், வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை பார்த்து ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தார்.
வினேஷ் போகத்துக்கு மருத்துவ ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறிய அவர், அவரது தகுதிநீக்கத்தை எதிர்த்து ஐக்கிய உலக மல்யுத்த சம்மேளனத்திடம் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இறுதிப் போட்டியின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக வினேஷ் போகத்தின் மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட அயராத முயற்சியை தாம் நேரில் பார்த்து வியந்ததாகவும் பேட்டியின்போது இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி. உஷா கூறினார்.