இந்த சட்டத்திருத்தம், யாருக்கும் எதிரானது அல்ல. அனைத்து சமுதாய மக்கள் நலனையும் உள்ளடக்கிய சட்டமாகவே அமையப்பெற்றுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வக்பு வாரியச் சட்டம் 1995ல், நமது மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வரவிருக்கிறது. இது குறித்து, நமது மாண்புமிகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ அவர்கள், செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்தத் திருத்தங்களுக்கு, பெரும்பாலான இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களும், மத்திய அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ அவர்களை நேரில் சந்தித்து, தங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வழக்கம்போல, எதிர்க்கட்சிகள் உண்மையை அறியாமல், பொதுமக்களைத் திசைதிருப்புவதற்காக, இந்தத் திருத்தங்களை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில், அதிக நிலம் வைத்திருக்கும் அமைப்புக்களில், முதலாவதாக இந்திய ராணுவமும், இரண்டாவதாக இந்திய ரயில்வே துறையும், மூன்றாவதாக, வக்பு வாரியமும் இருக்கின்றன.
மொத்தமாக, 9.40 லட்சம் ஏக்கர் நிலம், வக்பு வாரியத்திடம் உள்ளது. இந்த நிலங்கள், 8,70,000 சொத்துக்களாகப் பிரித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, சுமார் ரூ. 1.25 லட்சம் கோடியாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த நிலங்கள் எப்படி வக்பு வாரியத்துக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது என்பதில்தான் பொதுமக்களிடையே குழப்பம் இருக்கிறது.
உதாரணமாக, சமீபத்தில், திருச்சியில் உள்ள திருச்செந்துறை கிராமம் முழுவதுமே வக்ஃபு வாரியத்தின் சொத்து எனக் கூறிவிட்டார்கள். ஆனால், திருச்செந்துறையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.
அப்படி இருக்கையில், திருச்செந்துறை கிராமம் எப்படி வக்பு வாரியத்துக்குச் சொந்தமானதாக இருக்க இருக்க முடியும்? திருச்சி, வேலூர் உட்பட, தமிழகம் முழுவதுமே பல்வேறு இடங்களில் இந்தப் பிரச்சினை நிலவுகிறது.
குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளர், அந்த நிலத்தை விற்க முயற்சி செய்யும்போது, அது வக்பு வாரியத்தின் சொத்து என்று அறிவிக்கப்பட்டிருந்தால், நிலத்தின் உரிமையாளர், வக்பு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற்று, பதிவாளர் அலுவலகத்தில் வழங்கினால் மட்டுமே நிலத்தை விற்க முடியும் என்ற நிலை தற்போது இருக்கிறது.
தலைமுறை தலைமுறைகளாக ஒரு குடும்ப உறுப்பினர்கள், இடத்தின் உரிமையாளர்களாக இருந்து வரும்போது, திடீரென அந்த இடம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டால், அதனைப் பொதுமக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பலதரப்பினரும் இருக்கிறார்கள்.
நமது நாட்டைப் பொறுத்தவரை சன்னி, ஷியா என்ற இரு பெரும் பிரிவு முஸ்லீம்களைத் தவிர, சூஃபி முஸ்லீம் பிரிவினரும் இருக்கிறார்கள். வக்பு வாரிய சட்டத்தில், சூஃபி முஸ்லீம்களுக்கான மதிப்பு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கிறார்கள். மேலும், தங்கள் சொத்துகளிலும் வக்பு வாரியம் தலையிடுகிறது என்றும், தங்கள் சொத்திற்கும் வக்பு வாரியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் அவர்கள் குரலாக இருக்கிறது.
இது போன்ற குழப்பங்களைக் களையவும், தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும், சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்களுக்கே, சொத்தில் உரிமையை உறுதி செய்யவும்தான், நமது மத்திய அரசு, வக்பு வாரியச் சட்டம் 1995ல், திருத்தம் கொண்டு வர உள்ளது.
ஒரு சொத்தை வக்பு வாரிய சொத்து என அங்கீகரிக்கும் அதிகாரம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்குத்தான் உண்டு என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த வக்பு வாரியச் சட்டத் திருத்தங்கள் மூலம், சமூகத்தில் அமைதி நிலவவும், இஸ்லாமியச் சகோதரிகள், சமூகத்தில் பின்தங்கியிருக்கும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும், நன்மையே கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கிறது.
வழக்கம்போல, வக்பு வாரியச் சட்டத் திருத்தத்தில், திமுக உள்ளிட்ட கட்சிகள், தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க நாடகமாடுவது வெளிப்படை. இந்த சட்டத்திருத்தம், யாருக்கும் எதிரானது அல்ல. அனைத்து சமுதாய மக்கள் நலனையும் உள்ளடக்கிய சட்டமாகவே அமையப்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.