உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்த பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.
பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்து தொடர்பான வழக்கில், குறிப்பிட்ட ஒரு சொத்தை ஹரியானா அரசு கையகப்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவை ஏற்க மறுத்ததாக எதிர்மனுதாரர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்தநிலையில் சொத்து வழக்கு மீண்டும் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது முட்டாள்தனமானது என்று நீதிபதி விமர்சித்தார்.
இந்த விமர்சனத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீதி பரிபாலனத்தில் உயர்நிலை அமைப்புக்கு அனைத்து நீதிபதிகளும் கட்டுப்பட்டவர்கள் என்று கூறியது.
மேலும், நீதிமன்ற உத்தரவு குறித்து மனுதாரர்கள் விமர்சிக்கலாமே தவிர, நீதிபதிகள் அதிருப்தி தெரிவிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.