கடந்த 5 ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் மொத்தம் 58,635 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில்
தமிழ்நாட்டில் 2,207 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
தேசிய நெடுங்சாலைகளை மேம்படுத்துவதிலும். பராமரிப்பதிலும் அமைச்சகம் முக்கியப் பொறுப்பு வகிக்கிறது. நாடு முழுவதும் தற்போது 1,379 திட்டங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகள் மற்றும் நடப்பாண்டில் பாலங்கள், இடிந்து விழுந்த சில நிகழ்வுகள் நடந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக அவரது பதிலில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2022-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரை என்னுமிடத்தில் உள்ள பெரிய பாலத்தின் ஒரு பகுதி கர்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்தது.
இது குறித்து உடனடியாக நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நான்கு பேர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரை பணிகள் நிறுத்தப்பட்டன.
சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் மீது 7.305 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விழுந்த கர்டரை நிறுவனம் சொந்தச் செலவில் மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அடையாள அபராதமான ரூ.5 லட்சத்தை அந்த நிறுவனம் 29.08.2022 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் செலுத்தியது.
மதுரை-செட்டிக்குளம் பிரிவில் 4-வது தூணுக்கும். 5-வது தூணுக்கும் இடையே கர்டர்கள், ஜாக்கி பழுதடைந்ததால் கீழே விழுந்தன.
இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒப்பந்ததாரருக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்ததுடன் அவரை பணியிலிருந்தும் விலக்கி வைத்தது. மேலும் 4 முக்கிய பணியாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.