ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையத்தில் ஜப்பான் அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஜப்பானின் நோடோ பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 240 பேர் பலியாகினர்.
அதனைத்தொடர்ந்து ஜப்பானில் அவ்வப்போது நிலஅதிர்வு ஏற்பட்டாலும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ஜப்பானின் தென்பகுதியில் மியாசாகி அருகே அமைந்துள்ள கியுஷு தீவில் உள்ளூர் நேரப்படி, மாலை நான்கு மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது.
அடுத்த 40 நிமிடத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்தனர்.
இதனிடையே, இரண்டாம் முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாக பதிவானதால், கியூஷு, ஷிகோகு தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் கடலோர பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.