கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரே நாளில் சுமார் 26 லட்சம் ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வரும் சாந்தி என்பவர் பத்திர பதிவுக்கு அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று இரவு சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது சாந்தி நேரடியாக பணத்தை பெற்றுக் கொள்ளாமல், சக ஊழியர் நவீன் குமார் மற்றும் தனது ஓட்டுநர் ஆகியோர் மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
சோதனையில் ஒரே நாளில் 25 லட்சத்து 33 ஆயிரம் அளவிலான பணத்தை கூகுள் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் லஞ்சமாக பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. சார் பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.