வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக பரிசீலிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்த நிலையில், அந்தக் குழுவில் இடம்பெறும் மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமிய பெண்களும், இஸ்லாமியர் அல்லாதோரும் இடம்பெறுவதை உறுதிசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன.
இதையடுத்து, சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டுக்குழு அமைப்பதற்கு, மக்களவை உறுப்பினர்களின் பெயர் விவரத்தை கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
இந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் எம்.பி.க்கள் ஆ. ராசா, நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அரவிந்த் சாவந்த், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட 21 பேர் இடம்பெறுவதாக கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இந்தத் தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது.
இதேபோல கூட்டுக்குழு அமைப்பதற்கு மாநிலங்களவையிலிருந்து 10 பேரை பரிந்துரை செய்யுமாறு அதன் தலைவருக்கு கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்தார். இதன்பேரில், பிரிஜ் லால், ராதா மோகன் தாஸ் அகர்வால், விஜயசாய் ரெட்டி, சஞ்சய் சிங் உள்ளிட்ட 10 எம்பிக்கள் கூட்டுக்குழுவில் இடம்பெறுவதாக மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.