பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு புகாரில், ஒலிம்பிக் போட்டி நிறைவடைவதற்கு முன் முடிவு அறிவிக்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மல்யுத்தத்துக்கான 50 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனையுடன் வினேஷ் போகத் மோதவிருந்த நிலையில், 100 கிராம் உடல் எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பை அவர் நழுவ விட்டார். இந்நிலையில், தனது தகுதிநீக்கத்தை எதிர்த்தும், வெள்ளிப் பதக்கமாவது வழங்கக் கோரியும் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.
இதை பரிசீலித்த நீதிமன்றம், ஒலிம்பிக் போட்டி நிறைவடையும் ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு முன் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.