இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டுதான் பூமிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களில் முடிய வேண்டிய அவரது பயணம் நீண்டு கொண்டே செல்வது ஏன்? பூமிக்கு திரும்புவதில் என்ன சிக்கல்? விரிவாக பார்க்கலாம்.
இப்படி மகிழ்ச்சியோடு நடனமாடிக்கொண்டே சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த சுனிதா இப்போதும் அதே மனநிலையோடு இருக்கிறாரா என்று தெரியவில்லை.
58 வயதான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க கப்பற்படையின் விமானி மற்றும் விண்வெளி வீராங்கனை ஆவார். 2006-ஆம் ஆண்டு முதன்முறையாகவும் 2012-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் விண்வெளிக்கு சென்று திரும்பியிருக்கிறார் சுனிதா.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயன்று வரும் நாசா, அதற்காக போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் எதிர்காலத்தில் மக்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. இவ்வளவு முக்கியமான பணியை சோதனை முயற்சி இல்லாமல் செய்ய முடியுமா?
அதனால் கடந்த ஜூன் 5-ஆம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி மையத்திலிருந்து மூத்த விண்வெளி வீரர் BUTCH WILMORE மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்ணுக்கு அனுப்பட்டனர். சில நாட்களில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் எனக்கூறப்பட்டது.
ஆனால் இரண்டு மாதங்கள் கடந்த பிறகும் அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கியுள்ளனர். இருவரையும் அழைத்துச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதே அதற்கு காரணம்.
இதற்கிடையே வில்மோரும் சுனிதாவும் நலமாக இருப்பதாகவும் விண்கலத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் நாசா மற்றும் போயிங் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் தற்போது கிடைத்திருக்கும் தகவல்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் இருவரும் விண்வெளி மையத்தை விட்டு புறப்படுவார்கள் என்றும் எதிர்வரும் புத்தாண்டை அங்கேயே வரவேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சூழலில் எலான் மஸ்க்கின் SPACE X நிறுவனத்துக்கு சொந்தமான DRAGON விண்கலம் செப்டம்பர் மாத இறுதியில் விண்ணுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 4 பேர் பயணிக்கக்கூடிய டிராகன் விண்கலத்தில் இரண்டு வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல இருப்பதாகவும், சுனிதா, வில்மோர் உள்ளிட்டவர்களுக்கு தேவையான உணவு, உடை போன்றவற்றை அவர்கள் கொண்டு செல்லப்போவதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் DRAGON விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதில் சுனிதாவும் வில்மோரும் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அது போயிங் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
விண்வெளிக்குச் செல்லும் முன்பே ஸ்டார்லைனர் விண்கலத்தில் பழுது ஏற்பட்டதால் இரண்டு முறை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது விண்வெளிக்குச் சென்ற பிறகும் விண்கலம் பழுதடைந்ததோடு அதை சரிசெய்யவும் முடியவில்லை. ஒருவேளை பிரச்னை சரிசெய்யப்பட்டாலும் பூமிக்கு திரும்பும் வரை மீண்டும் பழுது ஏற்படாமல் இருக்க வேண்டும்.
வழியில் ஏதேனும் சிக்கல் உருவானால் அது விண்வெளி வீரர்களின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும். 2003-ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.