உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் நோக்கில் பல்வேறு துறைகளில் இந்தியா வியத்தகு வளர்ச்சியை பெற்று வருகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் வளர்ச்சி பாதை எப்படி இருந்தது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உலக வரலாற்றில் நீண்டகாலமாகவே மிக அதிகமான செல்வ வளம் மிக்கப் பொருளாதார நாடாக இந்தியா இருந்து வந்தது. அந்நியர் ஆட்சியின் போது பின்தங்கிய நிலையில் கிடந்த இந்தியா, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. அந்நேரத்தில், ஆட்சி செய்த அந்நியர்களால் நாட்டின் செல்வங்கள் சூறையாடப்பட்டு மிகவும் ஏழை நாடாக இந்தியா மாறியிருந்தது.
விரைவான மறுசீரமைப்பு தேவைப்பட்ட சூழலில், அரசும் மக்களும் ஒன்றிணைந்து, பல்வேறு துறைகளில் கொள்கை மற்றும் செயல் திட்டம் மூலம், படிப்படியாக வலிமை பெற்று, பல சாதனை மைல்கற்களை அடைந்து, இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்து நிற்கிறது.
77 ஆண்டு காலத்தில் சுதந்திர இந்தியா மகத்தான வளர்ச்சியை அனைத்து துறைகளிலும் அடைந்து இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.
1951ம் ஆண்டு முதல் 5 ஆண்டுத் திட்டத்தை உருவாக்கியதில், விவசாயம், அறிவியல், உள்கட்டமைப்பு கல்வி மற்றும் முக்கியமாக அடிப்படை வளர்ச்சிக்கான அடித்தளத்தை இந்தியா அமைத்தது.
1942 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), 1954 ஆம் ஆண்டில் அணுசக்தித் துறை (DAE), இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO), 1958 ஆம் ஆண்டில் மின்னணுவியல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள், 1971 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் விண்வெளித் துறை மற்றும் 1980 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் துறை என பல்வேறு அரசு அமைப்புகள் அமைக்கப்பட்டன.
1976ம் ஆண்டுகளில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி ஆகிய சாதனைகளால் நாடு தன்னிறைவு பெற்றிருந்தது.
இதனையடுத்து 1980ம் ஆண்டில் மஞ்சள் புரட்சி மற்றும் நீலப் புரட்சி கண்ட இந்தியா, சமையல் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை உயர்த்தியது மற்றும் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவானது.
1990களில் தங்கப் புரட்சி மூலமாக, தேன் மற்றும் தோட்டக்கலை உற்பத்தியில் வளர்ச்சியை நாடு கண்டது.
தொடர்ந்து, 21 ஆம் நூற்றாண்டில், இந்தியா பல்வேறு மசாலாப் பொருட்கள், மருத்துவ தாவரங்கள் மற்றும் நறுமணத் தாவரங்களை வளர்ப்பதில் தன்னிறைவு பெற்றுள்ளது.
பால் உற்பத்தியில் இந்தியா முதலிடமும், அரிசி, கோதுமை, கரும்பு, நிலக்கடலை, காய்கறிகள். பழங்கள், பருத்தி உற்பத்தியில் இரண்டாவது மிகப் பெரிய உற்பத்தியாளராகவும் இந்தியா விளங்குகிறது.
விளைச்சலை மேம்படுத்துவதற்கும், மாறிவரும் காலத்துக்கு ஏற்ற வகையில் பண்ணை ரகங்களை மாற்றியமைப்பதற்கும் இந்தியா வேளாண்-மரபணுவியல் மற்றும் மரபணு திருத்தம் கொண்டுவந்து கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விரைவாக முன்னேறி வருகிறது.
2017ம் ஆண்டு முதல் உள்நாட்டு கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி உருவாக்கப்பட்டது தொடர்ந்து ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் உருவாக்கப்பட்டது.
அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகள், சூப்பர்சோனிக் போர் விமானங்களான தேஜஸ், பொக்ரான் II வகை அணு ஏவுகணைகள், உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையான பிரமோஸ் ஆகியவற்றை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது இந்தியா.
1975ம் ஆண்டு உருவாக்கப் பட்ட ஆரிய பட்டா இந்தியாவின் முதல் செயற்கை கோளாகும். 1980களில் இந்திய தேசிய செயற்கைக்கோள் (INSAT) மற்றும் இந்திய தொலை உணர்திறன் செயற்கைக்கோள் (IRS) விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.
2020ம் ஆண்டு, இந்தியாவின் ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிக்கிள் (HSDTV) வெற்றிகரமாக சோதனை செய்யப் பட்டது. இந்த தொழில்நுட்பம் உடைய 4வது நாடாக இந்தியா மாறியுள்ளது.
அதே ஆண்டு இந்தியா தனது முதல் செயற்கைக்கோள் செலுத்தும் வாகனத்தை SLV-3 ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 1984ம் ஆண்டு இந்தியா தனது முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவை விண்வெளிக்கு அனுப்பியது. 2000ம் ஆண்டுகளில், சொந்த ராக்கெட்டுகளை உருவாக்கத் தொடங்கிய இந்தியா, தொடர்ந்து சந்திரயான், மங்கள்யான் , ககன்யான், ஆதித்யா எல்1, சுக்ராயன் என விண்வெளி சாதனையை தொடர்கிறது.
இந்தியாவின் இன்னொரு சாதனை மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன். இதன் மூலம், தனது முதல் முயற்சியில் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது இந்தியா.
2017ம் ஆண்டில், PSLV C-37 ஒரே ஏவலின் போது 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி உலக சாதனை படைத்தது.
மேலும், GSLV-D5 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கிரையோஜெனிக் இயந்திரத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்தது இந்தியா.
அறிவியல் துறைகளில் முன்னேற்றம் கண்டு வரும் இந்தியா அதே அளவு இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டி வருகிறது.
சர்வதேச நிதி ஆணையம் மற்றும் நிதி ஆயோக்கின் தரவுகள் படி , இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவின் தீவிர வறுமை 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது என்று சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.
1983ம் ஆண்டில், முதல் இந்திய அறிவியல் அடிப்படை நிலையம் அண்டார்டிகாவில் அமைத்த இந்தியா 1984 ஆம் ஆண்டில், C-DOT என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இதன் மூலம் நாட்டின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நாட்டின் வளங்களை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து தொலைத்தொடர்பு புரட்சியைத் தொடங்கி வைத்தது.
1986ம் ஆண்டு முதல் ரயில்வே பயணிகள் முன்பதிவு திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது. இது தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு திறனை நிரூபிக்கும் மிகப்பெரிய திட்டமாகும்.
இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை ஹர்ஷா 1986 ஆம் ஆண்டுதான் பிறந்தது; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இந்த சாதனை இனப்பெருக்கத் துறையில் இந்தியாவை உலக வரைபடத்தில் முன்னணியில் நிறுத்தியது.
1991ம் ஆண்டில் இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரான PARAM உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1998ம் ஆண்டு கல்பாக்கத்தில் இந்தியாவின் அணுசக்தி உற்பத்தி மற்றும் எரிபொருள் மறு செயலாக்க ஆலை நிறுவப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப் பட்ட முதல் இந்திய தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரு தனித்துவமான அடையாள எண் ஆதார் 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
2014 ஆம் ஆண்டு இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில்
IndARC என்னும் ஆர்க்டிக் கண்காணிப்பு நிலையத்தை இந்தியா நிறுவியது.
கொரொனா தொற்று பரவல் காலத்தில், அதற்கான தடுப்பூசியை இந்தியா கண்டுபிடித்தது. உடனடியாக 200 கோடி தடுப்பூசிகளைக் உற்பத்தி செய்து சர்வதேச நாடுகளை ஆச்சரியப்பட வைத்தது இந்தியா.
உலகெங்கிலும் தேவைப்பட்ட கொரொனா தடுப்பூசிகளில் சுமார் 50 சதவீத தடுப்பூசிகளை விநியோகித்து பல கோடிக்கணக்கான மனித உயிர்களை இந்தியா காப்பாற்றியது.
இது மட்டுமின்றி ரோட்டா வைரஸ், மல்டிபேசில்லரி தொழுநோய், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற பல தடுப்பூசிகளை இந்தியா கண்டுபிடித்துள்ளது.
அனைவராலும் வாங்கக்கூடிய அளவுக்கு பிராண்டு எதுவும் இல்லாத பொது மருந்துகள் (generic pharmaceuticals) தயாரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறது
இப்படி பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசு கொள்கைகளால், இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. மேலும்,பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் மிக கணிசமாக குறைந்துள்ளது. மேலும்,மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 55 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர். 80 கோடி மக்களுக்கு ரேஷனில் இலவசமாக அரிசி, கோதுமையை மத்திய அரசு வழங்கி வரும் சூழலில் 25 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையில் இந்தியா முதன்மையான நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் நாடாக வளர்ந்துள்ள இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகவும் திகழ்கிறது.
இது மட்டுமின்றி, The Laser Interferometer Gravitational-Wave Observatory (LIGO) லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் கிராவிடேஷனல்-வேவ் அப்சர்வேட்டரி, The Large Hadron Collider (LHC, CERN), லார்ஜ் ஹாட்ரான் மோதல், International Thermonuclear Experimental Reactor (Iter)சர்வதேச தெர்மோநியூக்ளியர் எக்ஸ்பெரிமென்டல் ரியாக்டர், மற்றும் Square Kilometre Array (SKA) போன்ற சர்வதேச மெகா-அறிவியல் திட்டங்களில் இந்தியாவும் முக்கிய பங்காற்றி வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்வரை, நாடு ஊழலின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்கள் பொருளாதாரத்தை சீரழித்துக் கொண்டிருந்த நேரத்தில், உலகப் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இந்தியா இருந்தது. பிரதமர் மோடியின் ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் இன்று உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.
இந்தியா பல்வேறு திறன்களுடன் முன்னேறி வருகிறது. இந்தியாவின் ரயில்வே துறை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத், புல்லட் ரயிலும் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மின்சாரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களும் இந்தியாவில் இயக்கப் படுகின்றன. குவாண்டம் கம்ப்யூட்டர் என்ற வகையில் ஒவ்வொரு இந்திய கிராமத்திலும் இணையத் தொடர்பு கிடைக்கிறது.
ஒருபுறம் நானோ யூரியா, நானோ டிஏபி ஆகியவை உருவாக்கப்பட்டு வந்தாலும் மறுபுறம் இயற்கை விவசாயத்திலும் முத்திரை பதித்து வருகிறது இந்தியா. செமிகண்டக்டர்கள் உற்பத்தியிலும் இந்தியா கால் ஊன்றி இருக்கிறது.
ஆட்டோமொபைல் உற்பத்தியில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கோலோச்சி வந்த நிலையில், உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
டிஜிட்டல் இந்தியா மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் முன்னேற்றங்களை இந்தியா கண்டுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்கள் மூலம் உற்பத்தியை அதிகரித்திருக்கிறது. மேலும் வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும் புதிய வழிவகை செய்யப் பட்டுள்ளன. கூடுதலாக ட்ரோன்கள் தொடர்பானபுதிய முறைகளில், சரக்கு விநியோகம், டிஜிட்டல் மேப்பிங், கண்காணிப்பு மற்றும் பறக்கும் டாக்சிகளுக்கு எண்ணற்ற கதவுகளை இந்தியா திறந்து வைத்துளளது.
சீன செல்போன்களை நாம் வாங்கிய காலம் மாறி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தற்போது இந்தியாவிலேயே 90 சதவீத செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன.
லட்சிய மனப்பான்மை, பெரிய சிந்தனை, தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் மோடி அரசின் பணிக் கலாச்சாரம், அனைவருக்கும் மகிழ்ச்சி (சர்வஜன் ஹிதாயா), அனைவருக்கும் ஆரோக்கியம் (சர்வஜன் சுகாயா) என்ற தாரக மந்திரத்தில் செயல்பட்டு இந்தியாவை விஸ்வ குருவாக நிர்மாணித்து வருகிறது.
இப்போது தேசம் ஒரு பாதுகாப்பு உணர்வை அனுபவித்து வருகிறது, தேசம் பாதுகாக்கப்படும்போது, முன்னேற்றம் குறித்த புதிய கனவுகளை நனவாக்க உதவும் அமைதி ஏற்படுகிறது. தொடர் குண்டுவெடிப்புகளின் சகாப்தம் இப்போது இல்லை. குண்டு வெடிப்புக்களால் அப்பாவிகள் கொல்லப்படுவது இப்போது இல்லை. தீவிரவாத தாக்குதல்கள் கணிசமாக குறைந்துள்ளன. நக்சல் பாதித்த பகுதிகளிலும், பெரும் மாற்றம் ஏற்பட்டு, முன்னேற்றத்துக்கான தகுந்த சூழல் உருவாகியுள்ளது.
“ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற திசையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. உலகம் பருவநிலை நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை – மிஷன் லைஃப் முன்முயற்சியை இந்தியா முன்னெடுத்திருக்கிறது.பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை இந்தியா சர்வதேச அளவில் வலியுறுத்தி , அதை செயல் திட்டமாக்கி தந்திருக்கிறது.
கடல் பிராந்தியத்தில் மோதல்களை உலகம் கண்டு வரும் நிலையில், உலகளாவிய கடல்சார் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய “சாகர் பிளாட்பார்ம்”திட்டத்தை இந்தியா உலகத்துக்கு வழங்கி இருக்கிறது.
பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தி, உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை இந்தியாவில் நிறுவப் பட்டுள்ளது. யோகா மற்றும் ஆயுர்வேதம் மூலம், உலக மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்துக்காக இந்தியா சிறப்பான பணிகளை செய்து வருகிறது.
தேசம் முதலில் என்ற முழக்கத்துடன், அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் அனைவரின் நம்பிக்கையுடன் என்ற வகையில், சர்வதேச நலனுக்காக இந்தியா ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது.
பஞ்ச பிரான் அல்லது அமிர்த காலத்தில், இந்தியாவை மேம்படுத்துதல், காலனி ஆதிக்க அடிமை மனப்பான்மையின் எந்தச் சுவடுகளையும் அகற்றுதல், பாரத பாரம்பரிய வேர்களில் மரியாதை மற்றும் பெருமை, ஒற்றுமையின் வளர்ச்சி மற்றும் குடிமக்களிடையே கடமை உணர்வு ஆகிய 5 அடிப்படைகளில் செயலாற்ற பிரதமர் மோடி அழைப்பின் பேரில் இந்தியா வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
2047ம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் ‘அமிர்த காலத்தின்’ போது, மூவண்ணக் கொடி, வளர்ந்த இந்தியாவின் கொடியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் நோக்கமாக கொண்டுள்ளனர்.