தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தென்காசியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தில், குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான 152 கடைகள் உள்ளன.
இந்த கடைகளை நடத்திவரும் நபர்கள் கோயில் நிர்வாகத்துக்கு மாதந்தோறும் வாடகை செலுத்தி வந்தனர். இந்நிலையில் ஒருசில வியாபாரிகள் கொரோனா தொற்று காரணமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும், கடையின் சாவியை ஒப்படைக்க கோயில் நிர்வாகம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் கோயில் நிர்வாகத்தை கண்டித்தும், 9 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தியும் குற்றால வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். இதனால் சுற்றுலா பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.