2024ம் ஆண்டில் இதுவரை 322 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு அவர்களின் 44 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 35 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், அவர்களது 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் கற்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி வரை காவல் விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேவேளையில் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பாம்பன் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது
மேலும், இந்த வருடத்தில் மட்டும் இலங்கை கடற்படையால் 322 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 44 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.