எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் சமூக-பொருளாதார ரீதியில் மேம்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தது.
இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இட ஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கு விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டு வரப்படாது எனவும் அரசியலமைப்பு சட்டத்தின்படி எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.