வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி கேரளா சென்றார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணூர் சென்ற பிரதமர் மோடியை, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக வயநாடு சென்ற பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் உடன் சென்றார். ஹெலிகாப்டரில் சென்ற மோடியிடம் பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து வயநாட்டில் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பாதிப்பு மற்றும் மீட்புப் பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் ராணுவ அதிகாரி எடுத்துரைத்தார். பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர், முதலமைச்சர் பினராயி விஜயன் , மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.