லட்சக்கணக்கான வெளிநாட்டினர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற கருத்தை முன்வைத்து ட்ரம்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருவது அவர் சார்ந்த குடியரசு கட்சியில் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது “இந்த உணவை நீ சாப்பிடாவிட்டால் ஒரு இந்திய குழந்தை வந்து சாப்பிட்டுவிடும்” என்று கூறுவார்களாம். அதாவது அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகள் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரால் பறிக்கப்படுகிறது என்பதை குறிக்கும் வகையில் இவ்வாறு சொல்வார்களாம்.
கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் 2017-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரானதும் டொனால்டு ட்ரம்பும் சொன்னார். அதோடு நிற்காமல் H 1 B விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தார். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த H 1 B விசா வழிவகை செய்கிறது. 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இந்த விசாவை மேலும் சில காலம் நீட்டித்துக் கொள்ளலாம்.
H 1 B விசா பெற்றவரின் இணையருக்கு H 4 விசா வழங்கப்படும். அதன் மூலம் அவர்களும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பை பெற முடியும். ட்ரம்ப் அமெரிக்க அதிபரானதும் இந்த நடைமுறையை ரத்து செய்தார். அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு சிக்கல் ஏற்பட்டது. எனினும் பைடன் ஆட்சிக்கு வந்ததும் ட்ரம்ப் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கினார்.
இந்த நிலையில் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், அதே மண்ணின் மைந்தன் முழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார். வெளிநாட்டினரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என குடியரசு கட்சியின் மாநாட்டிலும் முடிவு செய்யப்பட்டதால் பரப்புரையின் போது தமது கருத்தை வலுவாக முன்வைத்து வருகிறார் ட்ரம்ப்.
இது அவரது குடியரசு கட்சியைச் சேர்ந்த சிலருக்கே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ட்ரம்ப் மற்றும் கட்சியின் கருத்து குறித்து அவர்கள் தெளிவுப்படுத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக குடியேறியவர்களும் அனுமதியின்றி அமெரிக்காவில் வசிப்பவர்களுமே வெளியேற்றப்படுவார்கள் என்று ட்ரம்ப் கூறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புள்ளிவிவரங்களின்படி அமெரிக்க குடியுரிமை பெறுவதில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி வெளிநாட்டைச் சேர்ந்த 4 கோடியே 60 லட்சம் பேர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் 14 விழுக்காடாகும். வெளிநாட்டவர்களில் 53 விழுக்காடு பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்துள்ளது. மொத்தமாக 2 கோடியே 45 லட்சம் வெளிநாட்டவர்கள் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளனர்.
கடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்காக பிரதமர் மோடியை அழைத்துச் சென்றார் ட்ரம்ப். அப்படியிருந்தும் இம்முறை மீண்டும் பழைய முழக்கத்தையே கையில் எடுத்திருக்கிறார். சட்டவிரோத குடியேறிகளால் அமெரிக்காவில் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன என்பது அவரது வாதம்.
அதோடு அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் முறைக்கு முடிவுகட்டவும் ட்ரம்ப் திட்டமிட்டிருக்கிறார். அதே போல் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்கவும் முடிவு செய்திருக்கிறார். பதவிக்கு வந்ததும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை முகாம்களுக்கு மாற்றி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றுவதுதான் ட்ரம்பின் திட்டம் என்று கூறப்படுகிறது.
அதனால் அமெரிக்க தொழில்துறை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், வேளாண்மை, பால் வளம் உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டினர் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். லட்சக்கணக்கானவர்களை மொத்தமாக வெளியேற்றும் போது அவர்களுக்கான மாற்றை உடனடியாக உருவாக்க முடியாது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க ட்ரம்பின் இந்த முடிவால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் ஆதரவு கமலா ஹாரிஸுக்கு கிடைக்கும் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அந்தக் கவலை குடியரசு கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் இருப்பதாகவே தெரிகிறது.