பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மல்யுத்த வீரர் அமன் 10 மணி நேரத்தில் 4 கிலோ 600 கிராம் எடையை குறைத்திருக்கிறார். அது எப்படி சாத்தியமானது? விரிவாக பார்க்கலாம்.
மிக இளம் வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கும் அமன் ஷெராவத், 2003-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஹரியானா மாநிலம் பிரோஹரில் (BIROHAR) பிறந்தவர். 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதால் உந்தப்பட்ட அமன் தமது 10-ஆவது வயதில் இருந்து மல்யுத்த பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதன் விளைவாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அவர், அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து வெண்கல பதக்கத்துக்காக பியூர்டோரிகோவின் (PUERTO RICO) டேரியன் கிரஸ் (DARIAN CRUZ) உடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. போட்டி தொடங்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட எடை அளவைவிட நான்கரை கிலோ அதிகமிருந்தார் அமன். ஏற்கனவே வெறும் 100 கிராம் அதிக எடையால் வினேஷ் போகத்தின் தங்கக் கனவு தகர்ந்த நிலையில், அமனுக்கும் அந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இந்திய பயிற்சியாளர்கள் உறுதியாக இருந்தனர்.
எப்படியாவது அமனின் எடையை 61 புள்ளி 5 கிலோவில் இருந்து 57 கிலோவுக்கோ அல்லது அதற்கு குறைவாகவோ கொண்டு வர மூத்த பயிற்சியாளர்கள் ஜக்மந்தர் சிங் மற்றும் வீரேந்தர் தஹியா ஆகியோர் முடிவு செய்தனர். அதற்காக தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு இருவரும் அமனுடன் மல்யுத்தம் செய்தனர். அதன்பிறகு ஒரு மணி நேரத்து வெந்நீர் குளியல் மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அடுத்த ஒரு மணிநேரத்துக்கு ட்ரெட் மில்லில் இடைவிடாமல் ஓடினார் அமன்.
அரை மணி நேர ஓய்வுக்கு பின்னர் 5 முறை SAUNA BATH எனப்படும் வெப்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொருமுறையும் 5 நிமிடங்கள் வீதம் மொத்தம் 25 நிமிடங்களுக்கு SAUNA BATH மேற்கொள்ளப்பட்டது. இவ்வளவு செய்ததற்கு பிறகும் 900 கிராம் எடை அதிகமாக இருந்தது. இதனையடுத்து அமனுக்கு மசாஜ் செய்யப்பட்டு, லேசான ஜாக்கிங் பயிற்சி மேற்கொண்டார். இறுதியாக 15 நிமிடங்கள் ஓட்டப் பயிற்சியிலும் ஈடுபட்டார். அதிகாலை 4.30 மணிக்கு அமனின் எடை 56 கிலோ 900 கிராம் என்ற நிலைக்கு வந்தது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 100 கிராம் குறைவாக இருந்தது.
10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 4 கிலோ 600 கிராம் எடை குறைக்கப்பட்டதால் அதன் பிறகு அமன் உறங்கவில்லை. இந்த முயற்சியின் போது எலுமிச்சை, தேன் கலந்த வெந்நீர் மற்றும் சிறிதளவு காபி மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. இரவு முழுவதும் தூங்காமல் மல்யுத்தம் தொடர்பான வீடியோக்களை பார்த்த அமன், 21 ஆண்டுகள் 24 நாட்கள் என்ற இளம் வயதில் வெண்கலப் பதக்கத்தை வென்று மிக குறைந்த வயதில் இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கம் பெற்றவர் என்ற சாதனையை பி.வி.சிந்துவிடம் இருந்து தட்டிப் பறித்துவிட்டார்.
ஒலிம்பிக் பதக்கத்தை தமது பெற்றோருக்கு அர்பணிப்பதாக கூறினார் அமன். ஆனால் அவர் பதக்கம் வென்றதோ, அதை தங்களுக்கு அர்பணித்ததோ அமனின் பெற்றொருக்கு தெரியாது. ஏனெனில் அவருக்கு 11 வயது இருக்கும் போதே பெற்றோர் மறைந்துவிட்டனர். எனினும் கடும் பயிற்சி, முயற்சி மற்றும் உழைப்பால் ஒலிம்பிக் பதக்கம் வென்ற அமனை ஏராளமான இந்திய பெற்றோர் தங்களது மகனாகவே ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
எதிர்காலத்தில் அமன் ஷெராவத் மேலும் பல்வேறு சாதனைகளை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்…