நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் வி.கே.சசிகலா தொடங்கியிருக்கும் மக்கள் சந்திப்பு பயணம் அதிமுகவை ஒருங்கிணைக்குமா ? அல்லது மேலும் வலுவிழக்கச் செய்யுமா ? என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியிலும் எழுந்துள்ளது.
அம்மா வழியில் மக்கள் பயணம் எனும் தலைப்பில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக முதல்கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை நிறைவு செய்த வி.கே.சசிகலா, திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இரண்டாம் கட்ட பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். சசிகலாவின் இந்த மக்கள் சந்திப்பு பயணம் அவரது ஆதரவாளர்களுக்கு புத்துணர்ச்சியையும், அதிமுகவினருக்கு சற்று கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சசிகலா, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி சிறைக்கு செல்லும் சூழல் உருவானது.
சிறைதண்டனை முடிந்து இல்லம் திரும்பிய சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் வழங்கிய வரவேற்பு பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. பெங்களூரு சிறையிலிருந்து தி.நகர் இல்லம் வரை ஆதரவாளர்கள் கூடி அளித்த வரவேற்பு அவரை மீண்டும் அதிகார பீடத்தில் அமர வைப்பதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் புயலுக்கு பின் அமைதி என்பதைப் போல யாரும் எதிர்பாராத வகையில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து அமைதியாக ஒதுங்கினார் வி.கே.சசிகலா
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சியமைத்த நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சசிகலா, தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடுவது, இல்லத்திற்கு வரவழைத்து பேசுவது என நேரடி அரசியலுக்குள் மீண்டும் வரத்தொடங்கினார். ஆனாலும் அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக சசிகலா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகும் போதெல்லாம், சசிகலாவால் அரசியலுக்குள் அழைத்துவரப்பட்டவர்களை வைத்தே அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், அம்மா வழியில் மக்கள் பயணம் என்ற புதிய பயணத்திட்டத்தை வி.கே. சசிகலா தொடங்கியிருக்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் கட்ட பயணத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம் நடைபெறும் வி.கே. சசிகலாவின் இந்த மக்கள் சந்திப்பு பயணம் ஏற்கனவே வலுவிழந்து காணப்படும் அதிமுகவை மேலும் வலுவிழக்கச் செய்யுமே தவிர வலுப்படுத்தவோ, ஒருங்கிணைக்கவோ ஒருபோதும் உதவாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்றதற்கு பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் நிலையில், சசிகலாவின் இந்த மக்கள் சந்திப்பு பயணம் அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மக்கள் சந்திப்பு பயணத்தின் மூலம் மக்களின் ஆதரவு சசிகலாவுக்கு கிடைக்குமா ? அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள்ளாக அதிமுகவை ஒன்றிணைக்கும் அவரின் எண்ணம் ஈடேறுமா ? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதிமுகவினருக்கு சசிகலாவின் அடுத்தடுத்த மக்கள் சந்திப்பு பயணங்களே விடையாக அமையும்.