அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட செய்தியை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதானி குழுமம் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி, பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டில் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இந்தப் போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் செபி தலைவர் மாதபி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையை முற்றிலும் நிராகரித்த அதானி குழுமம், ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் முழுவதுமாக விசாரிக்கப்பட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று முடிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறும் நோக்கில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.