ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு ஒலிம்பிக் பதக்கம்… ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கம்… வாழ்வில் ஒரு முறையாவது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் ஏராளமான விளையாட்டு வீரர்களின் கனவு.
போதும் போதும் என்னுமளவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களும் இருக்கிறார்கள், ஒருமுறைகூட பதக்கம் வெல்லாதவர்களும் இருக்கிறார்கள். பலரால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவே முடியவில்லை.
இப்படி விளையாட்டு வீரர்களின் முக்கிய இலக்காக இருக்கும் ஒலிம்பிக் பதக்கத்தின் மதிப்பு தெரியுமா?
முதல் இடம் பிடிப்போருக்கு வழங்கப்படும் தங்கப்பதக்கம் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல. அதன் மொத்த எடை 529 கிராமாக இருந்தாலும் அதில் 6 கிராம்தான் தங்கம், மீதி வெள்ளி.
இரண்டாவது பரிசு பெறுவோருக்கு தரப்படும் வெள்ளிப்பதக்கம் முழுவதும் வெள்ளியால் செய்யப்பட்டது.
மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு கொடுக்கப்படும் வெண்கலப் பதக்கம் தாமிரம், துத்தநாகம் உள்ளிட்டவற்றால் உருவாக்கப்பட்டது.
இந்தாண்டு தயாரிக்கப்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களில் ஈஃபில் கோபுரத்தின் இரும்பும் சேர்க்கப்பட்டது கூடுதல் சிறப்பு.
வெற்றியாளர்களுக்கு பதக்கத்தோடு 50 ஆயிரம் டாலர்கள் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர அந்தந்த நாடுகளும் பதக்கம் வென்ற தமது வீரர்களுக்கு பணப்பரிசு வழங்குகின்றன. தங்கம் வென்றவர்களுக்கு 37,500 டாலர்களையும், வெள்ளிப் பதக்கம் பெற்றவர்களுக்கு 22,500 டாலர்களையும் வெண்கலம் வென்றவர்களுக்கு 15,000 டாலர்களையும் வழங்குகிறது அமெரிக்கா.
இந்தியாவை பொறுத்தவரை தங்கம் வென்றால் 75 லட்சம் ரூபாயும், வெள்ளி வென்றால் 50 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்றால் 30 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது.
ஆனால் மற்ற நாடுகளைவிட மிக அதிக பரிசுத்தொகையை வழங்குகிறது ஹாங்காங். அந்நாட்டில் தங்கம் வென்றவருக்கு வழங்கப்படும் பணப்பரிசு 60 லட்சம் ஹாங்காங் டாலர்கள். இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய்.
எத்தனை கோடி கொடுத்தாலும் தேசியக் கொடியை போர்த்தியபடி பெறும் ஒலிம்பிக் பதக்கம்தான் பெருமைக்குரியது.