வெளிநாடுகளில் அதானி குழுமம் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபியும் அவரது கணவரும் பங்கு வைத்திருப்பதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
செபி தலைவர் மாதபி, அவரது கணவர் தவால் பச் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டிய முதலீடுகளை கடந்த 2015-ஆம் ஆண்டில் தாங்கள் சிங்கப்பூரில் வசித்தபோது மேற்கொண்டதாக கூறியுள்ளனர்.
அதிலும், செபி தலைவராக மாதபி பதவியேற்பதற்கு முன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதலீடு செய்ததாக கூறிய அவர்கள், தலைமை முதலீட்டு அதிகாரியும் மாதபியின் சிறுவயது நண்பருமான அனில் அஹுஜாவின் ஆலோசனைப்படிதான் முதலீடு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே பல்வேறு விவகாரங்களில் ஹிண்டன்பெர்க் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதற்கெல்லாம் பதிலளிக்காமல் செபியின் நம்பகத்தன்மையையும், அதன் தலைவரின் பண்பையும் அந்நிறுவனம் கேள்விக்கு உட்படுத்துவதாகவும் மாதபியும் அவரது கணவரும் குற்றம்சாட்டியுள்ளார்.