ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் மீது பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அதன் அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு நாட்டில் பொருளாதார சீரழிவையும், நிலையற்ற தன்மையையும் உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை சனிக்கிழமை வெளியானதை சுட்டிக்காட்டிய ரவிசங்கர் பிரசாத், இதனால் ஞாயிற்றுக்கிழமை அமளி ஏற்பட்டதாகவும், மறுநாளான திங்கள்கிழமை மூலதன சந்தையில் குளறுபடி உருவானதாகவும் குறிப்பிட்டார்.
மூலதன சந்தைக்கும், பங்கு பரிவர்த்தனைக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக கூறிய அவர், சந்தை நிலவரம் சுமூகமாக நீடிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது செபியின் கடமை என்றும் தெரிவித்தார்.
ஏற்கெனவே உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலளிக்காமல், அடிப்படை ஏதுமின்றி மீண்டும் அந்நிறுவனம் குற்றம்சாட்டுவதாக ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார்.