வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்ட போட்டிதான் அந்நாட்டில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணம் எனப் புகார் எழுந்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.
தெற்காசியாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் வன்முறை வெடித்ததால் பதவி விலகிய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய செய்தி அனைவரும் அறிந்ததே. இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமே அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் பின்னணியில் வேறு பல வில்லங்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தாம் ராஜினாமா செய்தது ஏன் என்பது பற்றி ஷேக் ஹசீனா கூறியதாக சில தகவல்கள் முன்னணி நாளேடுகளில் வெளியாகியுள்ளன. அதன்படி மாணவர்களின் பிணங்கள் மீதேறி ஆட்சியைப் பிடிக்க பயங்கரவாதிகள் முனைந்ததாகவும் அதை தடுக்கவே தாம் பதவி விலகியதாகவும் ஹசீனா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இடஒதுக்கீடு தொடர்பான தமது கருத்து திட்டமிட்டு திரித்து பரப்பப்பட்டதாகவும் அப்பாவி மக்கள் அதை நம்பிவிட்டதாகவும் ஹசீனா வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தாம் நினைத்திருந்தால் அமெரிக்கா கேட்ட செயின்ட் மார்ட்டின் தீவை கொடுத்துவிட்டு பிரதமராக நீடித்திருக்கலாம் என்றும், ஆனால் தமக்கு அதில் உடன்பாடில்லை என்றும் ஷேக் ஹசீனா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயின்ட் மார்ட்டின் தீவில் கப்பல் மற்றும் விமானப்படைத் தளம் அமைக்க விரும்பியது அமெரிக்கா. அதற்காக ராணுவ ரீதியில் இணைந்து செயல்படுவோம் என வங்கதேசத்துக்கு அழைப்பு விடுத்தது. அது மட்டும் நடந்தால் வங்கதேசம் – சீனா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துவதோடு, இந்தியா மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும் என அமெரிக்கா திட்டமிட்டதாக தெரிகிறது. வங்கதேசத்தில் மத ரீதியான பிளவை ஏற்படுத்தி கிறிஸ்தவர்களுக்காக கிழக்கு தைமூர் போன்ற ஓரிடத்தை உருவாக்க அமெரிக்க முயன்றதாகவும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தத் தகவலை அமெரிக்கா மறுத்தாலும் உண்மை அதுவே என்கிறது ஹசீனாவுக்கு நெருங்கிய வட்டாரம். உலகளவில் தமக்கு போட்டி நாடாக இருக்கும் சீனாவுக்கும் வங்கதேசத்துக்கும் இருக்கும் உறவு அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். தெற்காசியாவில் பாகிஸ்தானுக்குப் பிறகு வங்கதேசத்தில்தான் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது சீனா.
வங்கதேசத்தின் ராணுவத் தளவாடங்களில் 86 விழுக்காடு சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டவை. மேலும் வங்காள விரிகுடாவில் கப்பல்படைத் தளத்தை அமைக்க விரும்பிய சீனா அதன் ஒருபகுதியாக வங்கதேசத்தின் SONADIA தீவில் ஆழ்கடல் துறைமுகத்தை உருவாக்க திட்டமிட்டது. இதே போல் மியான்மரிலும் கால்பதித்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்தது சீனா.
ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்த வரை இந்தியா மற்றும் சீனாவுடனான வங்கதேசத்தின் உறவை ஓரளவுக்கு சமமாக வைத்திருந்தார். தற்போது இடைக்கால அரசின் ஆட்சி நடந்து வரும் நிலையில் வங்கதேச தேசியவாத கட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வந்து கலிதா ஜியா பிரதமரானால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது.
வங்கதேசத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ உறவு அதிகரித்தால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படும். மேலும் வங்கதேசம் இந்தியாவுக்கு எதிராக திரும்பினால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாகிவிடும். அப்படி ஒரு சூழல் வந்தால் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கலாம். எனவே தற்போதைய சூழலில் வங்காள விரிகுடாவின் புவிசார் அரசியலில் முக்கிய நாடாக மாறியிருக்கிறது வங்கதேசம்.