மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம், வெற்றிகரமான செய்தியை வழங்கி இருப்பதோடு, வங்க தேச அரசுக்கும் ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கிறது. அது என்ன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
கடந்த வாரம் அரசுமுறை பயணமாக 2 நாட்கள் மாலத் தீவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அப்துல்லா ஷாகித் உள்ளிட்ட பிற தலைவர்களையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
மாலத்தீவில் முகமது முய்சு மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டுடனான இந்தியாவின் உறவில் கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டன. பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய மூன்று விமான தளங்களை நிர்வகிக்கும் இந்திய இராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக பொதுமக்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் தான், அதிபரும் அவரது அமைச்சர்களும், அரசு உயரதிகாரிகளும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தற்போது சிகப்பு கம்பள உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.
தனது அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரான எதையும் மாலத்தீவில் அனுமதிக்க மாட்டோம் என்றும், மாலத்தீவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வெளியுறவுக் கொள்கையை தான் பின்பற்றுவதாகவும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறி இருக்கிறார்.
மேலும் இந்தியா, மாலத்தீவின் நெருங்கிய மற்றும் முக்கியமான நட்பு நாடு என்று விவரித்த அதிபர் முகமது முய்சு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்துவதில் தனது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
இந்தியாவே வெளியேறு என சீனாவின் குரலாக ஒலித்த மாலத்தீவு அதிபர் இப்போது ,இந்தியாவுக்கு ஆதரவு நிலை எடுத்திருப்பது, அந்நாட்டு அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப் படுகிறது.
மாலத்தீவின் முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல்லா ஷாகித் , அதிபர் முகமது முய்ஸு தலைமையிலான அரசு, இந்தியாவுடனான வெளியுறவுக் கொள்கையை உறுதிப்படுத்தி இருப்பதை வரவேற்று இருக்கிறார். மேலும், அவசர காலங்களில் இந்தியாதான் எப்போதும் முதலில் உதவி செய்யும் என்று மாலத்தீவு மக்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஏற்கெனவே, மாலத்தீவின் பட்ஜெட்டில் இருநூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான பற்றாக்குறை உள்ளது. 2026ம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மாலத்தீவு.
இதன் காரணமாக, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, துருக்கி, சீனா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளின் நிதி உதவிக்கு முயற்சிசெய்த போதும், அந்த நாடுகள் எல்லாம் பொதுவாக சந்தை மதிப்பின் அடிப்படையில் வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கவே முன் வருகிறார்கள். கடன் வாங்கினால் மேலும் மாலத்தீவு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரும் வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில், கடந்த மே மாதத்தில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா, மாலத்தீவுக்கு வழங்கி இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் மேலும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாலத்தீவுக்கு சீனா உள்ளிட்ட எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவி செய்து வருகிறது.
ஏற்கெனவே இலங்கை அரசியல் நெருக்கடி ஏற்பட்டு, பொருளாதார சிக்கல்களில் மாட்டிய நிலையில் இந்தியாதான் இலங்கைக்கு உதவியது. நேபாள நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போதும் இந்தியா தான் உதவிக்கரம் தந்தது.
இப்போது, ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் வங்கதேசமும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம் , பிரதமர் மோடியின் தலைமையிலான மோடியின் இந்தியாவை சிறுமைப்படுத்த முடியாது என்றும், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு இந்தியாவே சிறந்த பாதுகாவலன் என்றும் ஒரு முக்கிய செய்தியை வங்க தேசத்துக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறது.