ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது இந்தியாவில் முதலீடுகளை நிறுத்த காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த சதி என்றும், ஹிண்டன்பர்க்கில் ஒரு பெரிய முதலீட்டாளர் தான் ஜார்ஜ் சொரோஸ் என்றும் முன்னாள் சட்ட அமைச்சரும், பாஜக தலைவருமான ரவி சங்கர் பிரசாத் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய அரசியல் களத்தில் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படும் இந்த ஜார்ஜ் சொரோஸ் யார்? அவர் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1930ம் ஆண்டு ஒரு யூத குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ் சோரோஸ், ஹங்கேரி நாட்டின் நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி 1947ம் ஆண்டு பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தார். அங்கே லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் தனது படிப்பைத் தொடர்ந்தார், 1951 ஆம் ஆண்டு தத்துவத்தில் இளங்கலை மற்றும் அறிவியல் முதுகலைப் பெற்றார். 1969 ஆம் ஆண்டு தனது முதல் நிறுவனமான டபுள் ஈகிளை தொடங்குவதற்கு முன், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள வணிக வங்கிகளில் ஊழியராக பணியாற்றினார்.
இடது சாரி முற்போக்கு மற்றும் தாராளவாத கருத்துக்களை ஆதரிக்கும் 94 வயதான ஜார்ஜ் சொரோஸ் தனது ஓபன் சொசைட்டி அறக்கட்டளைகள் மூலம் அதிக அளவில் நன்கொடைகள் அளிப்பவராக அறியப் படுகிறார்.
ஜார்ஜ் சொரோஸின் ஓபன் சொசைட்டி அறக்கட்டளை அதன் செயல்பாடுகளுக்கு 18 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக செலவிட்டதாக அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவிக்கிறது.
ஜார்ஜ் சோரோஸ் மற்றும் அவரது ஓபன் சொசைட்டி அறக்கட்டளைகள், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பல அரசுகளை நிலைகுலைய வைத்ததோடு மற்றும் போட்டி அரசியல் குழுக்களை உருவாக்கும் முகவர்கள் என்று பரவலாக அழைக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக பந்தயம் கட்டி 1 பில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பை குறைத்தது மற்றும் பிரிட்டன் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைத்ததன் விளைவாக பெரும் செல்வத்தைச் சேர்த்தார். இன்றும் ஜார்ஜ் சோரோஸ் ஸை “இங்கிலாந்து வங்கியை சீர்குலைத்த நபர்” என்றே கூறுகிறார்கள்.
1997ம் ஆண்டு இந்தோனேசியா, தாய்லாந்து, தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் கடுமையான பொருளாதாரச் சரிவை சந்தித்தன. அதிலும் மலேசியா மிக மோசமான நிலையை சந்தித்தது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஜார்ஜ் சொரோஸ் தாய்லாந்து மற்றும் மலேசியாவின் நாணயங்களுக்கு எதிராக பந்தயம் கட்டி அந்நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கினார் என்று தெரிய வந்தது.
இதற்கு ஜார்ஜ் சொரோஸ் மீது குற்றஞ்சாட்டிய அப்போதைய மலேசிய பிரதமரான மகாதீர் முகமது, ஜார்ஜ் சொரோஸ்ஸை ஒரு முட்டாள் என்றும் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.
மகாதீர் ஆட்சியை ஒன்றும் செய்ய முடிய வில்லை என்றாலும் மலேசியாவில் அப்போது உள்நாட்டு கலவரங்களையும் போராட்டங்களையும் தூண்டிவிட்டதில் ஜார்ஜ் சொரோஸ்ஸின் பங்கு முக்கியமானது.
மேலும் இந்தோனேசியாவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி தொடர்ந்து சுஹார்டோ அரசை முடிவுக்குக் கொண்டு வந்ததும் இந்த ஜார்ஜ் சொரோஸ் என்றும் அந்த அறிக்கை கூறியிருக்கிறது.
தென் கொரியாவில் அரசியல் குழப்பம் ஏற்படவும், உள்நாட்டில் பொருளாதார பிரச்னை ஏற்படவும் பின்னணியில் ஜார்ஜ் சொரோஸ் உள்ளார் என்று கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புதினை வீழ்த்துவதற்கான சதித்திட்டங்களில் முக்கிய பங்கு வகித்ததாக ஜார்ஜ் சோரோஸ் மீது குற்றம் சாட்டு எழுந்தது.
ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் 2016ம் ஆண்டு ஓபன் சொசைட்டி அறக்கட்டளைகள் ரஷ்ய அதிபர் புதின் மீதான தாக்குதல்களை மக்களிடம் பரப்புவதில் ஒருங்கிணைத்து செயல் பட்டதாக குற்றம் சாட்டியது.
மேலும், ஜார்ஜ் சோரோஸ்ஸும் அவரது அமைப்பும் தங்கள் செல்வங்களையும் செல்வாக்கையும் பயன்படுத்தி உலக நாடுகளில் அமைதியின்மையை தூண்டி வருவதாகவும். துன்பத்தில் இருந்து பணம் சம்பாதிப்பதற்காக , ஜனநாயகத்துக்கு எதிரான புதிய தாராளவாத கருத்துக்களைத் திணித்து வருவதாகவும் தெரிவித்தது.
2011ம் ஆண்டில் அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு நிதியளிப்பவராக ஜார்ஜ் சோரோஸ் பெயர் வெளிப்பட்டது.
வால் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான அரபு வசந்த இயக்கத்தை ஆதரித்து, இயக்கத்தில் செயல்படும் சிறு சிறு மாநிலக் குழுக்களுக்கு தாராளமாக நிதி அளித்ததாக ஆதார பூர்வமாக அறிக்கைகள் வெளிவந்தன.
அரபு வசந்தத்தின் போது துனிசியா மற்றும் எகிப்தில் உள்ள ஆட்சிகள் வெற்றிகரமாக தூக்கியெறியப் பட்டதற்கும் ஜார்ஜ் சோரோஸ் காரணம் என்று தெரிய வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அரசுகள் ஸ்திரத்தன்மை இழந்ததற்கும் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
2010 மற்றும் 2011 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் ஜனநாயகத்துக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் எழுச்சிகள் நடைபெற்றதுக்கும் ஜார்ஜ் சோரோஸ் அமைப்பே நிதியுதவி அளித்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிரான மாணவர் போராட்டம் பெரிய அளவில் நடந்து அமெரிக்க அரசே ஸ்தம்பித்து போவதற்கும், பின்னணியில் ஜார்ஜ் சோரோஸ்ஸின் பெயரே உள்ளதாக சொல்லப் படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் , முனிச் பாதுகாப்பு மாநாட்டுக்கு முன் பேசிய ஜார்ஜ் சோரோஸ் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு விற்பனை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி ஜனநாயகவாதி இல்லை என்று விமர்சித்த அவர், அதானி விவகாரம் இந்தியாவில் ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.
இந்திய ஜனநாயக அமைப்பை ஜார்ஜ் சோரோஸ் குறிவைத்ததாக குற்றஞ்சாட்டிய அப்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு வெளிநாட்டு சக்தியின் மையத்தில் ஜார்ஜ் சோரோஸ் என்ற நபர் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை காயப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். மேலும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரதமர் மோடி தான் தனது முக்கிய இலக்கு என்றும் ஜார்ஜ் சோரோஸ் அறிவித்திருப்பதாக கூறினார்.
அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கையை வெளியிட்ட தி ஆர்கனைஸ்டு க்ரைம் அண்ட் கரப்ஷன் ரிப்போர்டிங் ப்ராஜெக்ட்டின் (OCCRP) ஆதரவாளர்களில் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து பேசிய பாஜக தலைவர் ரவி சங்கர் பிரசாத், இந்தியாவில் பங்கு சந்தையை சீர் குலைக்க சதிநடப்பதாகவும் பங்குசந்தை சரிவடைந்தால் சிறு முதலீட்டாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி செய்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரசிற்கும் தொடர்பு இருப்பதாக கூறிய ரவி சங்கர் பிரசாத்,எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்ஜ் சோரோஸ்ஸின் ஏஜென்ட்டாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
உலகின் வலுவான நிதிக் கட்டமைப்பையும் வேகமாக வளரும் பொருளாதாரத்தையும் கொண்ட இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்கவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.