வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய பவள பாறை தீவு, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அரசு வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. வங்க தேச அரசியலில் பல ஆண்டுகளாக தாக்கத்தை ஏற்படுத்திவரும் பவள பாறை தீவுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் ? எங்கே இருக்கிறது இந்த தீவு ? இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
வங்க தேசத்தில் உள்ள ஒரே பவளப்பாறை தீவான செயின்ட் மார்ட்டின் தீவு நரிக்கெல் ஜின்ஜிரா- தேங்காய் தீவு என்று அழைக்கப் படுகிறது. இந்த தீவு தருச்சினி தீவு- இலவங்கப்பட்டை தீவு என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த தீவு வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. 3 கிலோமீட்டர் சதுர பரப்பளவு கொண்ட மிகவும் சிறிய தீவு இந்த செயின்ட் மார்ட்டின் தீவாகும்.
வங்க தேசத்தின் தெற்கே, காக்ஸ் பஜார்-டான்காஃப் தீபகற்பத்தின் முனையிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டில் அரேபிய வணிகர்கள் இந்ததீவில் முதன்முதலில் குடியேறிய போது, இந்த தீவு “ஜசிரா” என்று அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் சிட்டகாங்கின் துணை ஆணையரின் பெயரால் செயின்ட் மார்ட்டின் தீவு என்று அழைக்கப்பட்டது.
3,700 மக்கள் வசிக்கும் இந்த தீவில் மீன்பிடித்தல், நெல் சாகுபடி, தென்னை விவசாயம் மற்றும் கடற்பாசி அறுவடை ஆகியவை முதன்மையான தொழில்களாகும்.
இத்தீவில் உற்பத்தியாகும் விளைபொருட்கள் உலர்த்தப்பட்டு மியான்மருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வரலாற்று ரீதியில் பார்த்தால், 1937ஆம் ஆண்டில் மியான்மரில் இருந்து பிரிந்து பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இத் தீவு இருந்தது.
1947ம் ஆண்டு வரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த இந்த தீவு, இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் இந்த தீவைக் கொண்டு வந்தது.
1971ம் ஆண்டு நடந்த விடுதலைப் போரைத் தொடர்ந்து, இந்த தீவு வங்க தேசத்தின் கட்டுப்பாட்டில் வந்தது.
1974ம் ஆண்டில், பவளத் தீவு வங்க தேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மியான்மரும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதன்படி, மியான்மரின் கப்பல்கள் வங்க தேசத்தின் கடல் வழியாக இந்த தீவைச் சுற்றியுள்ள நாஃப் ஆற்றுக்குத் தடையின்றி செல்ல அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயம் (ITLOS) செயின்ட் மார்ட்டின் தீவை வங்க தேசத்தின் ஒரு பகுதியாக அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மர் மற்றும் வங்கதேசத்தின் தென்மேற்கே விரிந்துள்ள கடல் மற்றும் கடற்பரப்பின் ஒரு பகுதியாக இந்த பவள பாறை தீவு உள்ளது.
மியான்மரின் வடமேற்கு கடற்கரையிலிருந்து மேற்கே சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் நாஃப் ஆற்றின் முகப்பில் இந்த தீவு அமைந்துள்ளது.
இதற்கிடையே பட்டுப்பாதை திட்டத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா அதிக கவனம் செலுத்துகிறது.
தொடர்ச்சியான இராணுவ தளங்கள் மற்றும் பொருளாதார வர்த்தக வழித்தடங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முயற்சியாக சீனா இதை வைத்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான் வசமுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் BRI திட்டம் இந்திய இறையாண்மையை மீறுவதாக குற்றம் சாட்டுகிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருவது அமெரிக்காவுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது மலாக்கா ஜலசந்தியை சீனாவே அதிகமாக பயன்படுத்துகிறது. செயின்ட் மார்ட்டின் தீவில் ஒரு நாடு, தனது இராணுவத் தளத்தை அமைத்தால், அந்த ராணுவத் தளம் மலாக்கா ஜலசந்திக்கு மிக அருகில் இருக்கும்.
செயின்ட் மார்ட்டின் தீவில் ராணுவத் தளம் அமைக்கும் நாடு அங்கிருந்த படியே மூலமாக, சீனா மற்றும் மியான்மரின் நடவடிக்கைகளைத் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் , சீனாவுக்கு எதிராக இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதையும் கவனிக்க முடியும்.
இந்திய -பசிபிக் மண்டலத்தின் பல பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருவதால், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் செயின்ட் மார்ட்டின் தீவில் ராணுவத் தளம் பயன்படும் .
இந்த காரணங்களுக்காக தான் அமெரிக்கா, இந்த தீவில் இராணுவத் தளம் அமைக்க விரும்புகிறது.
தனது ஆட்சிக் காலத்தில் வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இந்த தீவை அமெரிக்காவிற்கு விற்க திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், வெள்ளை மாளிகை இந்த குற்றச்சாட்டுக்களை பலமுறை மறுத்து வந்துள்ளது.
இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா விரும்புகிறது. அதற்கு வங்க தேசத்தின் செயின்ட் மார்டின் தீவு அவசியம் தேவைப்படுகிறது.
செயிண்ட் மார்ட்டின் தீவை ஒப்படைக்க மறுத்ததால் அமெரிக்கா தம்மை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதாக ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.