“தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை” என தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அவரது அறிக்கைக்கு தமிழக போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், “பேருந்து கட்டணம் உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் அரசிடம் இல்லை” எனவும், “பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வண்ணம் அரசு பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், தவறான செய்தியை பரப்ப வேண்டாம்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.